Wednesday, July 29, 2020

75 கற்பகாம்பிகை 5-5-2017

                                   பல்லவி

கருணாமயி கற்பகவல்லி கல்ப தருவே காமாக்ஷி

சரணாகதி அடைந்தேன் சடுதியில் வரமளிப்பாய்

                                                             கருணாமயி

                                 அனுபல்லவி

தருணமிதே தயை புரிவாய் தயாபரி தாயே

மரணம் மறுபிறவி இலாது  தயை செய்திடுவாய்

                                                           கருணாமயி

                                    சரணம்

தினந்தினம் தீனன் நான் தாபத்ரயத்தில் தவித்திட

வனத்தீயில் சிக்கி மருவிடும் மான்போல் மயங்கிட

இனமறியா இம்மை மறுமை சூழலில் சிக்கி அழுதிட

க்ஷணத்தில் மோக்ஷமளித்திடுவாய் மோகனாம்பாளே

                                                                 கருணாமயி 

74 முருகன் 4 4-5-2017

                                  பல்லவி

செந்தூர் முருகனை சேவித்திட்டால் நினைந்திட்டால்

சிந்தா வியாகூலம் சடுதியில் விரைந்தே விலகிடுமே

                                                                    செந்தூர்

                                அனுபல்லவி

சிந்தூரம் சந்தனம் கலந்த மார்புடையோனை

மந்திரமாய் ஆறு எழுத்துக் கொண்டானை

                                                                   செந்தூர்

                                         சரணம்

பிறப்பிறப்பெனும் சகதியில் உழன்றிடும் உனக்கு

சிறப்புடன் சிவபதம் காட்டிடுவான் சிவபாலன்

மறுப்பேதுமின்றி வேண்டியதை வரமாயளிப்பான்

கறுப்புக் காற்றுப் பேய் பிசாசனைத்தையும் அழிப்பான்

                                                                     செந்தூர்


73 கஜேந்திர மோக்ஷம் 15-2-2017

                                  பல்லவி

தாகம் தணிந்திடத் தாமரைக் குளம் புகுந்த கரிநாதன்

வேகமாய் வந்த முதலை வாயில் சிக்கித் தவித்திட

                                                                       தாகம்

                              அனுபல்லவி

சோகமுடன் நின் நாமந்தனை நினைந்தேத்திட

மோகவலை தகர்த்திடும் மோகனனே காத்திட்டாய்

                                                                     தாகம்

                                     சரணம்

பாண்டிய ராஜன் முனி சாபத்தால் கரியாகித் தவிக்கையில்

வேண்டிய வரம் தந்திட வேகமுடன் வந்திட்டாய்

தீண்டிய சாபம் நீங்கிட முதலைக்கும் மோக்ஷம் அளித்தாய் 

தாண்டிடப் பிறவிக் கடலினை ஆண்டவனே அருள்வாய்

                                                                               தாகம்

72 சூரியன் 2 27-01-2017

                             பல்லவி

சூரியனே சூராதி சூரனே ஜோதி ஸ்வரூபனே

வீர்யமுடையோய் வீராதி வீரனே வினை தீர்    

                                                            சூரியனே

                         அனுபல்லவி

காரியம் நிறைவேறிடக் காத்தருள் தந்திடு கடவுளே

மாரி மாதம் மும்முறைப் பொழிந்திடச் செய்வாய்

                                                             சூரியனே

                             சரணம்

யுத்த மத்தியில்   மனம் தளர்ந்த மைதிலி மணாளன்

சத்திய சந்தன் ஸ்ரீராமன் கவலை தனைப் போக்கிட

சித்தமுடன் குறுமுனி ஓதிட்ட ஆதித்ய ஹ்ருதயம் தனை

நித்தமும் ஒதிட்டால் தடைகள் நீக்கிடுவாய் தயாபரனே

                                                              சூரியனே


71 பிரம்மா வாக்கு 10-01-2017

                           பல்லவி

மூன்று குணம் கொண்டு அலைந்திடும் மனிதா

சான்றோர் வாக்கின் படி சடுதியில் திருந்திடு

                                                           மூன்று

                         அனுபல்லவி

தோன்றிடும் தேவர் குணமாம் போகம் தனை

மீண்டும் மீண்டும் மிதமாக்கிடு – தாம்யம்

                                                          மூன்று

                             சரணம்

மனித குணத்தின் படி மனம் பேராசைக் கொண்டு

தினமும் திரிந்திடும்- மற்றவர்க்கு அளித்திடு – தத்தம்

சினம் கொண்டு சிவந்திடும் அரக்கர் குணம் வந்தால்

கனிவுடன் இரக்கம் கொள்வாய் – தயஸ்வம்

                                                               மூன்று


70 சூரியன் 9-12-2016

                                 பல்லவி

தினம் தினம் தீயிருளைத் தகர்த்திடு தயாளனே

தினகரனே திவ்யஸ்வரூபனே ஆற்றல் அளிப்பாய்              

                                                        தினம் தினம்

                               அனுபல்லவி

வனந்தனில் விருக்ஷங்கள் ஓங்கிட மழை தருவாய்

மனந்தனில் மாசுபடியாதிருக்க திடம் தருவாய்

                                                           தினம் தினம்

                                  சரணம்

ஆதவனே அருள் பாலிப்பாய் திடமுடன் பலம் தருவாய்

ஆதி முதற் கடவுளே ஆணவந்தனை அழித்திடுவாய்

சோதனைகள் சோகங்கள் மனக்கவலைகள் களைந்திடுவாய்

ஜோதிரூபனே சூரியனே சூரனே அருள் தருவாய்

                                                            தினம் தினம்


69 ஆத்மன் (கீதை, அத். 2) 7-12-2016

                         பல்லவி

ஆயுதம் அறுக்காது தீஅதுவும் தீண்டாததனை

வாயுதான் உலர்த்தாது நீரும் நனைக்காததனை

                                                           ஆயுதம்

                       அனுபல்லவி

காயந்தான் மரித்தாலும் சாகாது ஆத்மா

சாயாது நிலைத்திருக்கும் சாஸ்வதமாய்

                                                          ஆயுதம்

                                          சரணம்

ஆடைகள் கிழிந்திட்டால் கணத்தில் களைந்திட்டு

சூடுவோம் வண்ணப் புத்தாடைகளை வனப்புடன்

கேடு கெட்டு சரீரம் அழிந்து ஒழிந்து விட்டாலும்

தேடியே அடைந்திடும் புத்தம் புது சரீரங்களை

                                                          ஆயுதம


68 மனித நலம் 6-12-2016

                                 பல்லவி

காமந்தகாரனாய்க் கானல் நீரைத் தேடி அலைந்து

ஏமாற்றமடைந்து ஏக்கமடைதல் நலமோ மனிதா

                                                        காமந்தகாரனாய்

                             அனுபல்லவி

சமானமெனக்கில்லை என்று செருக்கடையாதே

குமரனும் குடுகுடு கிழவனாகிடுவான் சடுதியில்

                                                         காமந்தகாரனாய்

                                     சரணம்

தினமும் திவ்ய நாமங்களை ஜபித்திடு ஜடமே

மனந்தனை மனதால் கட்டிடு மயங்கிடாதே

சினந்தனை ஒழித்திடு சீராக வாழ்ந்திடுவாயே

கனத்திடும் பிறவி பாரம்  ஒழிந்திடுங் கலங்காதே

                                                        காமந்தகாரனாய்


67 கணபதி 4 30-09-2016

                               பல்லவி

ஐங்கரனை ஐயன் மகனை ஜபித்திடு என்றும் நற்

கைங்கர்யங்கள் செய்திடு மகாகவியைத் துதித்திடு

                                                               ஐங்கரனை

                             அனுபல்லவி

சங்கரன் மைந்தனைத் தொழுதிட்டால் துகள்மதியே யம

கிங்கரர்கள் சிரம் தாழ்த்தி சாமரம் வீசி வணங்கிடுவர்

                                                              ஐங்கரனை

                                   சரணம்

சஞ்சலங்கள் யாவும் சடுதியில் மறைந்திடும் அவனருளால்

சஞ்சித பாவங்களும் நீங்கிடும் சரணம் அடைவாய் அவனை

குஞ்சித பாதனும் உமையாளும் உனக்கருள்வாரென்றே    

நெஞ்சார நினைத்து வாயாரப் பாடி வாழ்த்தி வணங்கிடு

                                                                 ஐங்கரனை 


67 கணபதி 4 30-09-2016

66 வேங்கடமுடையான் 23-09-2016

                                   பல்லவி

வேங்கடமுடையானை வேண்டிட்டால் வேதனை தீருமே

தாங்கவொண்ணாத் துயரம் போம் தளராதே தவிக்காதே

                                                                                வேங்கட

                               அனுபல்லவி

தீங்கெலாம் நீங்கிடும் தீவினை போம் திகைக்காதே

ஓங்கும் புகழுடையானை ஓங்கார  ஸ்வரூபனை ஓம்பிடு

                                                                           வேங்கட

                                    சரணம்

அன்புடன் அவனை வணங்கிட்டால் ஆனந்தம் பொங்கிடும்

நண்பனைப் போல் நாளும் துணை நின்றிடுவான்

இன்பம் கூடும் இருவிழிகள் ஒளிர்ந்திடும் இயல்பாகவே

நன்மைகள் நாடி வரும் நாளும் நல்லதே நடந்திடும்

                                                                           வேங்கட


65 தத்துவம் 19-4-2016 11.35 am

                                      பல்லவி

சொப்பனமா நிஜமா கற்பனையா கனவா

இப்பொழுதும் அப்பொழுதா அப்பொழுதே இப்பொழுதா

                                                                           சொப்பனமா

                                  அனுபல்லவி

கப்பென்று எழுந்தனையே பாம்பினைக் கண்டு

குப்பென்று வியர்வை பதட்டம் நனவல்லவா

                                                                       சொப்பனமா

                                     சரணம்

வீடு நிலம் மனைவி குடும்பம் மதர்ப்பும்

மாடு மனை செல்வமும் செல்வாக்கும்

ஆடும் வரை ஆட்டமும் பாட்டமும் ஆணவமும்

தேடித் தேடி அலையும் முக்தி தனை அழித்திடும்

                                                                                 சொப்பனமா 

64 ஓங்கார விவரணம் ( மண்டோக்ய உபநிஷத் ) 18-4-2016 3.03 pm

                                          பல்லவி

ஓங்காரமே உலகின் நாதம் உண்மைப் பொருளாகும்
ரீங்காரமாய் ஒலித்து ஓதி உணர வொண்ணாததாகும்
                                                                                      ஓங்காரமே

                                    அனுபல்லவி

தீங்கிலா அதீத உலகினை அடைந்திட வேண்டிடில்
பாங்குடன் பரம்பொருளை நாடு பரவிடு பாமரனே
                                                                                    ஓங்காரமே
                                       சரணம்

அ கரமே ஆதி விழிப்புணர்வாகி நிற்பதாகும்
உ கரமோ கனவுலகினில் களித்திருப்பதாகும்
ம கரமா மெய்மறந்த தூக்கம் துக்கமில்லாதது
சிகரமே துரியை ஆகும் உச்ச்சரிப்பில்லாதது
                                                                                        ஓங்காரமே  

63 கந்தன் 2 17-4-2016 5.30pm

                                       பல்லவி

கருத்துடன் கந்தனின் கழல் பணிந்திட்டால்

உருத்திரன் புத்திரன் உயர் பதவி அளித்திடுவான்

                                                                                 கருத்துடன்

                                அனுபல்லவி

சிரத்தையுடன் சிவகாமி செல்வனை சிந்தித்திடு

வருத்தமேதுமில்லை வாழ்வு வளம் பெற்றிடுமே

                                                                             கருத்துடன்

                                    சரணம்

ஆணவம் கண்மம் மாயை என்ற முத்துயரமும்

நாணின்று விடுபட்ட அம்பு பட்டு அழிந்துடுமே

வீணில் வெந்துயரில் வெந்திடாதே வாழ்நாளில்

காணும் இன்பமே சடுதியில் வந்தடைந்திடும்

                                                                          கருத்துடன்


62 நடராஜர் 4 16-4-2016

                                      பல்லவி

 மகிழ்வுடன் மகேசனைத் துதித்திடு மனமே

சுகமுடன் சுந்தரவதனனைப் போற்றிடு சுமதியே

                                                                   மகிழ்வுடன்

                                  அனுபல்லவி

இகபர வினைகள் ஒழிந்திட இறைவனை நாடு

சுகவநேஸ்வரனை சடுதியில் சரணமடைவாயே

                                                               மகிழ்வுடன்

                                    சரணம்

ஆடல் அறுபத்துநான்கு நடத்திய நடேசனை

வீடுதனை விரைவில் அளித்திடும் விமலனை

காடுதனில் உறைந்திடும் கனகசபேசனை

சூடிய பிறை கொண்ட சூலாயுதபாணிதனை

                                                           மகிழ்வுடன்


61 நடராஜர் 3 18-03-2016

                                          பல்லவி
குன்று போல் வரும் துயரெல்லாம் குஞ்சித பாதமே
சென்றவிடம் தெரியாது செய்திடும் பெருந்தகையே
                                                                              குன்று போல்
                                    அனுபல்லவி
தொன்று முதற் கடவுளே தோடுடை செவியானே
அன்று செய்த வினைப் பயன்களை அறுத்தெரிவாயே
                                                                           குன்று போல்
                                       சரணம்
நடமாடும் தெய்வமே நாளும் நன்மையே செய்வாய்
விடநாகபூஷணனே விரைவில் விடுவிப்பாய் வினைகளை
தடங்கல்கள் தவத்தின் போது வந்தால் அவற்றினை அகற்றிடு   
மடமைகள் தீர்ந்து மகாதேவன் பாதங்கள் சேர்ந்திடவே
                                                                         குன்று போல்