Saturday, December 12, 2020

ஹனுமன் நாற்பது ஹனுமான் சாலீஸா -துளசிதாஸர் (தமிழில்)

                                                                  காப்பு


மாசுபட்ட மனஆடிதனை குருபாத தூளியால் துடைத்திட்டப் பின்

வீ சு புகழ் ரகுகுல திலகனை நால்வித பலன் தருவானைப் பணிகிறேன்

சிறுமதி படைத்தேன் வாயுகுமாரனே நினைக்கின்றேன் நித்தமும்

குறைகள் களைந்து வலிமை அறிவு ஆற்றல் அளித்துடுவாய்-

                                                           

                                                              மாற்று 


சற்குரு பாத தூளியால் மனஆடிதனைத் துடைத்து

நாற்பலனும் அருளும் ரகுகுல திலகனை பணிவேன்

சிறுமதியோன் யானும் நித்தம் தொழுதிடும் வாயுகுமாரா

குறைகள் களைந்து வலிமை அறிவாற்றல் அருள்வாய்


                                                          துதி

1. வெற்றி ஹனுமானே அறிஞனே பண்புக் கடலே

        வெற்றி வானர வீரா மூவுலகை ஒளிர்த்திடுவையே


2. இராம தூதனே அளவிலா ஆற்றல் உடையோனே

       அருமந்த மைந்தனே அஞ்சனையின், பவனசுதனே


3. கர்மவீரனே விஜயனே வன் தோளுடையானே

       துர்மதிதனை தகர்த்திடு  நன்மதிக்கு நண்பனே நாயகா


4. பொன்னிறம் பொருந்தியவனே புத்தாடை புனைந்தவனே

        நன்னொளி வீசும் குண்டலங் கொண்டு ,அலைவீசும் கேசம் கொண்டாய்


5. நின்கரங்கள் கொண்டன இடியும் இணையான கொடியும் 

       வன் தோளினை சுற்றியோ முஞ்சைப் பூணூல்  


6. முக்கண்ணன் அம்சமே கேசரியின் தவப் புதல்வா, நின்

        மிக்க ஆற்றலும் வீரமும் மூவுலகும் போற்றிடுமே


7. கல்வியைக்  கரை கண்டாய் குணவானே சாதுர்யனே

        நல்வினை நாதன் ராமனுக்கென நாளும் காத்திட்டாய்.


8. தசரதன் மகன் புகழ் கேட்டு ரஸித்திடுவாய் நாளும்

        வசமாய் மனதில் ராமன் சீதா, தம்பியுடன் இருந்திட்டாய்


9. நுண்ணுருவாய் கொண்டு சீதைக் காறுத லளித்தாய்

        வண்ணமிகு லங்கை  தனை பேருருவம் தரித்து தஹித்தாய்


10. மஹாரூபங் கொண்டு மாயாவி அரக்கர்களை அழித்தாய்

        சஹாயமாய் ராமகாரியம் செய்திட்டாய் அன்புடனே


11. மருந்து வேண்டி மலை கொண்டு சௌமித்ரனைக் காத்தாய்

       அருமந்த தம்பி பிழைத்திட அண்ணலுனை அணைத்திட்டார்.


12. அன்புடன் உன்னை புகழ்ந்தேத் திட்டார் புண்யராமன்

        பண்புடை பரதனுக்கு நிகர் நீயென்றார் நிகரற்றவர்


13. ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷனும் உனைப் புகழ்ந்திட்டார்

        வாயுபுத்ரா என்றார் நினை அணைத்திட்ட ஸ்ரீராமர்


14. சனகாதி முனிவர் பிரமன் முதலாம் தேவர்கள்

       முனிஸ்ரேஷ்ட நாரதர் கலைமகள் மற்றும் சேஷனும் 


15. காலன் குபேரன் அஷ்டதிக் பாலர்  மற்றும்

        சீலங் கொண்ட  கவிகளும் புகழ ஒண்ணா  புண்ணியன் நீ  


16. வானர அரசனுக்குப் பேருதவி செய்தனை நீ

        மாநரன் ராமன் மூலம் அரசினை மீட்டிட்டாய்


17. அறிவுரை தந்து விபீடணுக்கு வழி காட்டினையே

        சிறப்பு மிகு லங்காபுரிக்கதிபதி யாக்கினையே


18. ஆயிரம் யுக யோஜனை தூரத்திலிரு கதிரவனை

        தூயத் தீங்கனி யென்றெண்ணி விழுங்கிட்டாய்


19. கணையாழியைக்  கவ்வியே கடல் கடந்திட்டாய்

       அனைத்தாற்றல்  கொண்டவனே இதென்ன ஆச்சரியம்

20. இயலாத காரியங்கள் யாதெனினும் மாருதியே

        தயவுடன் சாதிப்பாய் தயாபரனே தர்ம தேவனே


21. ஐயனின் வாயிலைக் காத்திடும் காவலனே

        ஐயமில்லை நீயறியாது யாவரும் நுழைந்திலர்.


22. சரணம் நினையடைந்திட்டால் இன்பமே கூடிடுமன்றோ

        மரணமுதலா ஏதுபயமும் எனக்கில்லை   என்றென்றும்


23. நின்னை அடக்கிட நின்னையன்றி வேறெவருண்டு

        உன் பலம் கண்டு மூவுலகமும் பயந்து நடுங்கிடும்


24. அரும் வீரனே நினைத் தினமும் துதித்திட்டால்

        கரும் பூதமும் பேயும் சடுதியில் விலகிடுமே


25. வியாதிகளும் துன்பங்களும் விலகிடும் விரைவினில் 

        கியாதி புகழ் உந்தன் நாமம் ஜபித்திடவேக் கிட்டிடும்


26. மனம் வாக்குக் காயத்தால் உனைத் துதித் திட்டால்

        ஹனுமானே சங்கடங்கள் சடுதியில் அகன்றிடுமே


27. கடுந்தவம் புரியும் முனிகள் ஏத்தும் ஸ்ரீராமனுக்கு 

        சடுதியில் சகல சஹாயஞ் செய்திட்டாய் சேவகனே.


28. பரவிடும் பக்தர்கள் மனோரதம் சித்திப்பாய்

        பிறவிப் பயனையும் அவர்கட்கு அளித்திடுவாய்


29. யுகங்கள் நான்கிலும் உன் புகழ் பரவியதே

        ஜகமெங்கும் நின்நாமம் நிலைத்து நிற்கிறதே.


30. சாது சன்னியாசிகளுக்கு அருளளிக்கும் ஆண்டவனே

        வேதம் புகழ் ராமனுக்கன்பனே அஸுரர்களை அழிப்பவனே


31. அஷ்ட சித்தி நவநிதி அளித்திடும் ஆற்றலும்

        கஷ்டங்களை  களைவதும் சீதையின் வரமாகும்


32. அருமருந்தாம் ராமனருள் சாரமே நீயன்றோ

        தருமமிகு சேவகனாகிவிடும் தயாபரனன்றோ


33. உன்னைத் துதித்திட்டால் தூயவன் ராமன் கிடைப்பான்

        ஜன்மாந்தரப் பாவங்கள் நீங்கும் பண்பும் சேரும்


34. இறுதியில் இறைவிடம் சேர்வர் நின் பக்தர்கள்

        மறைகள் தொழும் ஹரிபக்தராய் ஆனந்திப்பர்


35. மாறாது நின்னை நித்யமும் நினைத்திட்டால் மாருதியே

       வேறு தெய்வமும் வேண்டுமோ வேதனை தீர்த்திடவே


36. மங்களம் பொங்கும் மனசாந்தியும் கிட்டுமே

        சங்கடம் தீரும் சரணாகதி நினை அடைந்திட்டால்


37. வெற்றி வெற்றி வெற்றி வீர ஹனுமான் உனக்கே 

        சுற்றி நின்று காத்திடுவாய் குருவே குணசீலா


38. நூறுமுறை இம்மந்திரம் அனுதினம் ஓதிட்டால்

        ஊறுகள் துன்பங்கள் போம் சுகமது கிட்டிடும்


39. ஹனுமான் நாற்பதை அன்புடன் ஓதிட்டால்

        தினமும் காத்திடுவான் முக்கண்ணன் முதல்வன்


40. ஹரிபஹவான் நித்தமும் துளசிதாசருக்கருள் புரிந்தான்

        சரணமடைவோர்க்கு சதா சரணமளிப்பான்


                                       தோஹா

சங்கடந்தீர்க்கும் வாயுபுத்திரன் மங்கள ரூபன்

எங்களுக்கு சீதா ராமர் தம்பியுடன் அருள் தருவான்

சுபம்


[மொழி பெயர்ப்பு : Dr. G பிரகாஷ்.  நன்றி:  பி.வி . உமேஷ் , மைசூர்  ]


Thursday, December 03, 2020

91 கரோனா வியாதி 30-03-2020

                                                 பல்லவி 


கருணாமயிக் கற்பகவல்லியைத் தொழுதிட்டால் 

கரோனா வியாதி காத தூரம் பறந்தோடிடுமே 

                                                                            கருணாமயிக்


                                           அனுபல்லவி 


பரமசிவன் தாள் பணிந்தால்  பார்வதியைத் தொழுதால் 

வைரஸ் பறந்தோடிடும் எதிர்ப்பு சக்தியும் கைக்கூடும் 

                                                                                            கருணாமயிக்


                                              சரணம் 


மஹாவிஷ்ணுவை  ஆராதித்திடு மாதவனைப் பணிந்திடு 

மஹாமாரி, சூலி, வைசூரி அனைத்தும் அகன்றிடுமே 

தேகாரோக்கியம் திடமாகும் தீவினைகள் அகன்றிடுமே 

சகாயமளித்திடுவர் சர்வதேவ ரிஷி, முனி கணங்களும் 

                                                                                                 கருணாமயிக்


90 முருகன் 10-05-2018

                                                          பல்லவி 


பள்ளத்தைத் தேடிச்  சென்றிடும் வெள்ளத்தைப் போல என் 

உள்ளமும் உனையே நாடி உருகுதே உமையவள் பாலா    

                                                                                                      பள்ளத்தைத் 


                                                      அனுபல்லவி 


கள்ளங்  கபடு  சூது வாது ஒழிந்திடல் வேண்டும் 

வள்ளி மணாளனே வரமருள்வாய் முருகா முதல்வா 

                                                                                      பள்ளத்தைத் 


                                            சரணம் 


இருவினைப் பயன்களும் என்னை வாட்டி வதைத்திடாமல் 

கருவறுத்திடு கருணாகரன் கந்தனே காத்து நிற்பாய் 

தருணமிதே தயை புரிவாய் தயாபரனே தவமணியே   

திருமகள் மருகா தினம் தொழுதேத்தி நின்றிடுவேன் 

                                                                                          பள்ளத்தைத் 

89 ஏழுமலையான் 18-10-2017 7.00 pm (inspired by Nannu palimpa)

                                                    பல்லவி 


என்னைப்   பாலித்திட ஏழுமலையிறங்கி வந்தனையோ 

சின்னக் குழந்தை அழுதிட  ஓடி வந்த தாயினைப் போல 

                                                                                                      என்னைப்


                                                 அனுபல்லவி 


மன்னர்களும் மகராஜர்களும் பல கோடி தந்துப்  பரவிட 

என்னைப் போன்ற ஏழையர்க்கு அருள் தந்திட ஆண்டவனே 

                                                                                                             என்னைப்


                                                    சரணம் 


தருணமிதே தயாபரனே  தந்தையே தனயனைக் காத்திடு 

கரும்பின் கனிரசமெனக் கருணை புரிய வரமருள்வாயே 

துரும்போன்று அலைதனில் தத்தளிப்பது போன்று இம்மைக் 

கருமப் புயலில் சிக்கியேக் கதறிடும் கயவனைக் காத்திடுவாய் 

                                                                                                              என்னைப்